எல் நினோவால் கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப் பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம்


எல் நினோ காலநிலை நிலைமையால் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால், கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப் பகுதிகள் பாதிக்கப்படக்கூடும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க கூறுகையில்,

கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதுடன் கடல் நீரோட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும். இதனால் பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் காணப்படும் பகுதிகள் பாதிக்கப்படலாம்.

குறிப்பாக, பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்களைச் சார்ந்து உணவு தேடும் கடல்வாழ் உயிரினங்களின் உணவுப் பகுதிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இலங்கையில் இதுவரை இரண்டு இடங்களில் லேசான அளவில் பவளப்பாறை வெளிறல் பதிவாகியுள்ளது, எனினும் நிலைமை இதுவரை பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தும் வகையில் இல்லை.

கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால் பவளப்பாறைகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும், என்றார்.

இந்நிலையில், கடல்வாழ் சூழலமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவற்றை விரைவாக மீளமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.