மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை


மகாவலி கங்கை படுகையைச் சார்ந்த தாழ்நிலப் பகுதிகளில் பெருவெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான கடும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாவலி கங்கையின் மேல்நிலைப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாவலி கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவில் மகாவலி கங்கையை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதுடன், குறித்த பகுதிகள் ஊடாகச் செல்லும் வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், மகாவலி கங்கையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து தீவிர விழிப்புணர்வுடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.