கல்முனையில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை!



கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை (16) குறித்த வர்த்தக நிலையத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸடீன் அவசர உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டனர்.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர் குறித்த வர்த்தக நிலையத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

இச்சோதனையின் போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்குத் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பெருந்தொகையான காலாவதியான உணவுப் பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டமைக்காகச் சம்பந்தப்பட்ட உணவகம் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.