
ஊழல்வாதிகளை கைது செய்வதில் எவ்வித வரையறையும் கிடையாது. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காகவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். கைதுகள் இனி தீவிரமடையும். எவரும் திணறக்கூடாது. வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ஊழல்வாதிகள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அக்குரஸ்ஸ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்காமல் ஊழலை இல்லாதொழிக்க முடியாது. அரச நிதியை கொள்ளையடித்து தன்னையும், தனது குடும்பத்தையும் வளப்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி ஒட்டுமொத்த மக்களையும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கிய ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கு அமைவாகவே செயற்படுவேன். ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் எவ்வித வரையறைகளும் கிடையாது.
ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது. சட்டத்தின் பிரகாரமே சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாக செயற்படுகிறது. ஆகவே சட்ட நடவடிக்கைகளை எவ்வாறு அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது.
ஊரில் எவரேனும் திருட்டு சம்பவங்களுக்காக சிறைக்கு சென்றால் சமூகம் அவரை புறக்கணிக்கும் ஆனால் அரசியல்வாதிகள் ஊழல் குற்றத்துக்காக சிறைச் செல்வதை கௌரவமாக பார்க்கிறார்கள்.மேடைகளில் ஏறி தமது ஊழல் பற்றி மக்களுக்கு உண்மையை குறிப்பிடாமல் அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுகிறார்கள். இவ்வாறானவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. சட்டத்தின் பிரகாரமே சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே சட்டத்தின் ஊடாகவே அனைவரும் தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.கைதுகள் இனி தொடரும்.
அரச நிதியை கொள்ளையடித்து விட்டு வெளிநாடுகளில் பாதுகாப்பாக பதுங்கியுள்ளவர்கள் வெகுவிரைவில் நாட்டுக்கு கொண்டுவரப்படுவார்கள். இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.ஆகவே கைது செய்யப்படும் போது எவரும் திணறக்கூடாது. மகன் சிறையில் என்று தந்தையும், மனைவி சிறையில் என்று கணவரும் அழ கூடாது. அவ்வாறு அழுதாலும் அது எனக்கு கேட்காது என்றார்.





.jpg)



.jpg)

.jpg)
.jpg)