திலீபன் நினைவேந்தல் அரச அனுசரணையுடன் இடம்பெறுகிறது , யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சிங்களவர்களை மாத்திரமே அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது - விமல் வீரவன்ச


வடக்கில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு அரச அனுசரணையுடன் இடம்பெறுகிறது.வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும், அடிப்படைவாதிகளும் சுதந்திரமாக செயற்படுகிறார்கள். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சிங்களவர்களை மாத்திரமே அரசாங்கம் இன்று நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (18) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி இறையான்மையை பாதுகாத்த முப்படையின் தளபதிகளும், அவர்களின் குடும்பத்தாரும் முன்னாள் அரச தலைவர்களின் குடும்பத்தாரையும் அரசாங்கம் இன்று நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் இனவாதிகளும், அடிப்படைவாதிகளும் சுதந்திரமாக செயற்படுகிறார்கள். வடக்கில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு அரச அனுசரணையுடன் இடம்பெறுகிறது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களின் உரிமை திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது.

சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவதை அவதானிக்க முடிகிறது. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டார்.தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்துமாறு கோர போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.ஆகவே அவர் தற்போது சிறந்த இலங்கையராகவே செயற்படுகிறார். அது எமக்கு பிரச்சினையல்ல என்றார்.