அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை சனிக்கிழமை (19) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
ஆசனப்பட்டி அணிவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமையுடன் (18) நிறைவடைவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆசனப்பட்டி வசதி இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என அவர் எச்சரித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் முன் மற்றும் பின் ஆசனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களில் உற்பத்தியாளர்களால் ஆசனப்பட்டி பொருத்தப்படாதிருந்ததால் வாகன உரிமையாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிவித்த தேசிய வீதி பாதுகாப்புச் சபையின் தலைவர் , அவ்வாறான வாகனங்களுக்கு ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்காக பல தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இறுதியாக வழங்கப்பட்ட கால அவகாசமும் இன்றுடன் நிறைவடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.








.jpg)



.jpg)