அரசாங்கங்கள் எப்போதும் ஏமாற்று வேலையையே செய்து வருகின்றன - சஜித் பிரேமதாச



நமது நாட்டில் ஏமாற்று அரசியலே தொடர்ந்தும் காணப்படுகின்றன. துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலைக்கு எண்ணெய் வழங்குவோம் என்று தேர்தல் காலத்தில் பிரஸ்தாபித்தாலும் இன்று அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறியபாடில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் கொலொன்ன கிளைக் கூட்டம் எம்பிலிபிட்டிய செஞ்சுரியா சிட்டி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் மாத்திரமே உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காணப்படும் நிலையிலும், தொடர்ந்தும் எரிபொருள்கள் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன.

அரசாங்கங்கள் எப்போதும் ஏமாற்று வேலையையே செய்து வருகின்றன. இந்த அரசாங்கமும் இதனையே செய்து வருகின்றது. மின்சாரக் கட்டணத்தை மூன்றில் 33 ஆல் குறைப்போம் எனக் கூறிவிட்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிவிட்டு இன்று அரசாங்கமும் எரிபொருளில் தங்கியிருக்கும் மின் உற்பத்தி நிலையங்களின் மாபியாக்களுக்கு அடிமையாக மாறியுள்ளது.

அன்று விவசாயிகளுடன் இணைந்து நெற்கதிர்களை வாயில் கடித்துக் கொண்டு, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா நிலையான விலையை பெற்றுத் தருவோம் என பிரஸ்தாபித்தனர்.

ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றன என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரே தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்து விட்டு 120 ரூபாயை நிலையான விலையாக அறிவித்து, விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரஜைகள் சமகாலத்தில் உரிய விழிப்புணர்வுகளை பெறாமல் இருப்பதே இவை அனைத்திற்கும் காரணமாக காணப்படுகின்றன. சமூகமாக நாம் அறிவால் பலம்பெற்ற சமூகமாக மாற வேண்டும். புதிய விடயங்களை நிராகரிக்காமல் ஒவ்வொரு துறையையும் புதிய பார்வையுடன் நோக்க வேண்டும்.

கல்வித் துறையில் பிரதானமாக 6 பிரிவினர்கள் காணப்படுகின்றனர். இந்த 6 பிரிவுகளிலும் பாரிய குறைபாடுகள், இடைவெளிகள் மற்றும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. நாட்டில் 250,000 ஆசிரியர்களும், 15,000 அதிபர்களும், சுமார் 10,145 பாடசாலைகளும் காணப்படுகின்றன.

சில பாடசாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த 6 துறைகளிலும் ஈடுபட்டுள்ள எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி போலியான நம்பிக்கைகளையும் எதிர்பார்புகளையும் வழங்காது. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மீதமுள்ள 2/3 வீத கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

எவ்விதக் காரணத்தைக் கொண்டும் பொய் வாக்குறுதிகள் மற்றும் கவர்ச்சிகரமான வார்த்தைகளால் கனவு உலகங்களை உருவாக்கி ஆசிரியர்களை நடுவீதியில் விட மாட்டோம்.

இலவசக் கல்வியிலும் பேதங்கள் காணப்படுகின்றன. தேசியப் பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நன்மைகளில் தெளிவான இடைவெளிகள் காணப்படுகின்றன.

‘இசுரு பாடசாலைகள்', 'சபிரி பாடசாலைகள் ', 'நவோதய பாடசாலைகள்', ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என அரசாங்கங்கள் மாறும்போது பல திட்டங்கள் வந்தாலும், கல்வித்துறையைப் பாதுகாக்கும் ஆசிரியர்களும் மாணவர்களுமே இறுதியில் பாதிக்கப்படுகின்றனர்.

கல்வித்துறையில் நவீனமயமாக்கல் வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டாலும், ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்படவில்லை. உலகத்தில் தகவல் தொழில்நுட்பம் ஆரம்ப நிலை கல்வியிலிருந்தே ஆங்கில மொழியில் கற்பிக்கப்பட்டாலும், நமது நாட்டில் 6-13 வகுப்புகள் வரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன.

திறன்கள், நிபுணத்துவம் மற்றும் அறிவை மேம்படுத்தும் முறையான செயற்பாடுகள் நமது கல்வித்துறையினுள் இல்லை. கல்வி அலுவலகங்களில் மனித மற்றும் பௌதீக வளங்கள் பற்றாக்குறையாக உள்ளன.

மாணவர்களில் 40 சதவீதமானோரிடமாவது ஸ்மார்ட் சாதனங்களுக்கான அணுகல் இல்லை. ஆங்கில மொழியிலான கல்வியை ஊக்கவிக்க வேண்டும். பிற்போக்கான, காலாவதியான கோத்திரவாதக் கருத்துக்களிலிருந்து வெளியேற வேண்டும்.

பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் கல்வியை மேம்படுத்தி, இத்தகைய வசதிகள் இல்லாத பிள்ளைகளுக்கு உரிய வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். பண வசதி படைத்த செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு இந்த சிரமங்கள் இல்லை.

முறையான கல்வி கிடைக்காத இலட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் நமது நாட்டின் இலவச கல்வி முறைக்குள் காணப்படுகின்றனர். இவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க எம்மால் முடியுமான சகல நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம்.

இக்காலத்திலேனும் நமது நாட்டின் கல்வி நவீன காலத்திற்கு ஏற்ப இற்றைப்படுத்தப்பட்டு முறமைப்படுத்தப்பட வேண்டும். ஆரம்பக் கல்வியில் இருந்தே கல்வியை நவீனமயமாக்கல் நடவடிக்கை நடக்க வேண்டும்.

பிறந்த நாள் முதல் 5 வயது வரை மூளை 75% வளர்ச்சி அடைகின்றது. இக்காலத்தில் நமது நாட்டின் கல்வி முறையானது முறையற்ற விதமாக அமைந்து காணப்படுகின்றன.

மாகாண சபைகளுக்குத் தேவையானவாறு பிரமாணங்களை உருவாக்குவதனால் பிள்ளைகள் கல்வியை தவறான முறையில் ஆரம்பிக்கின்றனர். மனப்பாட முறையில் இருந்து விடுபட்டு சவால்களுக்கு முகங்கொடுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதலை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறைக்குச் செல்ல வேண்டும்.

பாடத்திட்டங்கள் மாறும்போது ஆசிரியர்களைத் தயார்படுத்தல் மற்றும் பயிற்சிகளை இற்றைப்படுத்தல் என்பன நடக்க வேண்டும்.

மூன்றாம் நிலை மற்றும் தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்தி, டிஜிட்டல் கல்வியை மேம்படுத்த வேண்டும். இன்று பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான போதிய உபகரண வசதிகள் இல்லை. இவற்றை வாங்குவதற்காகப் பெற்றோரிடம் பணம் அறவிடப்படுகின்றன.

இவை இல்லாமை அதிபர்களின் பிரச்சினையல்ல, கல்வி அமைச்சின் பிரச்சினையாகும். மேலும், பாடசாலைகளில் தொடர்பாடல் வசதிகள் மற்றும் இணைய வசதிகள் கூட முறையாக இல்லை.

பாடசாலை மாணவர்களில் 40 வீதமானோருக்குக் கூட ஸ்மார்ட் கருவிக்கான அணுகல் (Access) வசதிகள் இல்லை. பாடசாலைக் கட்டமைப்பின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, இங்கு நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வு காண வேண்டும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கில மொழி எழுத்தறிவை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த யோசனைகள் பிரபலம் அற்றவை என்பதால், தேசியவாத கருத்துக்களை கூறித் என்னை தாக்கக் கூடும். எனவே, இந்தத் பின்தங்கிய, காலாவதியான கருத்துக்களில் இருந்து நாம் விடுபட வேண்டும். கல்வித்துறையில் உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கின்றது.

நாம் எமது கல்விமுறைமைகளையும் பாட விடயதானங்களையும் இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும். இலவச கல்வியின் ஊடாக எமது பிள்ளைகள் உலகை வெல்ல வேண்டும்.

தீவிர இடதுசாரிகள் தனியார் கல்வியை விமர்சித்து பேசிவிட்டு, இலவச கல்வி மட்டுமே என்று கூறிக்கொண்டு தமது பிள்ளைகளைத் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகின்றனர்.

அவர்களின் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் அந்த சந்தர்ப்பம் நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும். நாட்டில் எத்தகைய தனியார் கல்வி இருந்தாலும், நலன்புரி அரசில் இலவச கல்விக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

இந்த இலவச கல்வியை வலுப்படுத்தி மேம்படுத்த வேண்டும். காலாவதியான, மூடிய கருத்துக்களில் இருந்து விடுபட்டு புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்றார்.