மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அனோஜனின் விடுதலை தொடர்பில் இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதுவரைச் சந்தித்து அந்நாட்டுப் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்வான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத்திடத்தில் கோரிக்கை முன்வைப்பதற்கான முயற்சிகளை இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் மக்களின் பேரவை முன்னெடுத்திருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய இதுபற்றிக் கருத்துரைத்த தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அனோஜனின் குடும்பத்தினர் வெளியிட்ட விபரங்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் தூதுவர் இல்லாத போதிலும், அதிகாரத்திலுள்ள உயர்மட்டப் பிரதிநிதியை உடனடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் கோரவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளை அனோஜனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் ஊடாகவே செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில், வெளிவிவகார அமைச்சு இத்தண்டனைத் தீர்ப்பு குறித்து உடனடியாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனோஜன் தனது சமூக ஊடகப் பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டு, காணொளி ஊடாகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் என்ற செய்திகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படவேண்டியவை ஆகும். வேதனையை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருத்து, ஒரு மனிதன் மனம் திருந்தி, தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இல்லாமலாக்கிவிடக்கூடாது.
ஒரு இஸ்லாமியனாக அல்லாஹ்வின் அளப்பரிய கருணை மீது நான் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். 'அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்' என்றே நாம் அல்லாஹ்வைப் போற்றுகிறோம். நாம் மனிதர்களின் பலவீனங்களை அணுகும்போது, மேற்சொன்ன நற்பண்புகளே நம்மை வழிநடத்தவேண்டும். ஒருவரது நம்பிக்கை மற்றும் உண்மையான மனமாற்றம் குறித்த இறுதித்தீர்ப்பு எல்லாம் வல்ல இறைவனுடையதாகவே இருக்கவேண்டும்.
இந்நிலையில் கருணை காண்பித்து அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நான் சவுதி அரேபிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு அனோஜனுக்கு அவசியமான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், உடனடி இராஜதந்திர தலையீடுகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.
நீதியில் கருணைக்கும் இடமிருக்கவேண்டும். அனோஜன் அவரது குடும்பத்தினரிடம் திரும்பிச்சென்று அவரது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்குத் தகுதியானவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.






.jpg)



.jpg)

.jpg)
.jpg)