
பன்னலையில் வாகனமொன்றை பொலிஸார் மடக்கிப் பிடித்து மேற்கொண்ட சோதனையில், ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகைப் பணம் மற்றும் போதைப்பொருளைப் பொதியிடப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதன்படி, மோட்டார் காரொன்றில் போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், செப்டெம்பர் 22 ஆம் திகதி கிரிஉல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கிரிஉல்ல நகரிலிருந்து குறித்த வாகனத்தைப் பின்தொடர்ந்த பொலிஸார், பன்னல பகுதியில் அதனை நிறுத்தி சோதனையிட முயன்றுள்ளனர். எனினும், வாகனத்தில் இருந்தவர்கள் பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பிச் செல்ல முயன்றதுடன், இதன்போது பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, வாகனம் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அதன் பின்புற சக்கரத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
வாகனத்தில் இருந்தவர்கள் கதவுகளைத் திறக்க மறுத்ததால், முன்பக்க இடதுபுற கதவின் கண்ணாடியை உடைத்த பொலிஸார், அதிலிருந்தவர்களை வெளியேற்றி வாகனத்தைச் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது 15.260 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 924,770 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 36 வயதுடைய ஆண் ஒருவரும், 39 மற்றும் 16 வயதுடைய இரண்டு பெண்களும் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நெலும்தெனிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் தங்கியிருந்த வீட்டிலும் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு மேலும் 62 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 16 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம், போதைப்பொருள் பொதியிடப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 500 போத்தல் மூடிகள், வெளிப்படையான குழாய் சுருள் ஒன்று மற்றும் போதைப்பொருள் விநியோகத்திற்குப் பயன்படுத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 2,235 பிளாஸ்டிக் குழாய்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், பணம் மற்றும் ஏனைய பொருட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் மற்றும் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)




.jpg)


