நாமல் என்ன செய்தார் என்பது அவருக்கே நன்கு தெரியும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தான் என்ன செய்தார் என்பதை நன்கு அறிந்துள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவை அவர் செய்த அனைத்து விடயங்களையும் இன்னும் முழுமையாக வெளிக்கொணரவில்லை என்றாலும், குற்றம் செய்த நபர் தான் எவ்வளவு தூரம் தவறு செய்துள்ளார் என்பதை உணர்ந்திருப்பார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சான்றுகளின் அடிப்படையில் குற்றங்களை வெளிக்கொணர்வதே புலனாய்வாளர்களின் பணியாகும். தான் செய்த குற்றங்களை அறிந்த ஒருவர் கைது செய்யப்படலாம் என்று அச்சப்படுவதில் ஆச்சரியமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் கூட்டத்தைக் கண்டு அரசாங்கம் பயந்துவிட்டது என்றோ, அரசியல் பழிவாங்கல் காரணமாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றோ சொல்வது தவறானது; நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்ட நாளில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கைது செய்யப்படுவோம் என்று அவர்கள் உறுதியாக நம்பினால், அதற்கு முன்னதாகவே தங்கள் கூட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். தவறு அல்லது திருட்டுச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். சட்டத்திலிருந்து தப்பியோடாமல் அதை நேரடியாகச் சந்திக்க வேண்டும்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. மூன்று வாரங்களுக்குள் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.

ஒருவேளை உயர் நீதிமன்றம் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறினால், அதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது. சட்டத் திருத்தங்களை மேற்கொண்டபோது சர்வசன வாக்கெடுப்பு தேவைப்படும் சரத்துகளில் கைவைக்கப்படவில்லை என்பதால் சர்வசன வாக்கெடுப்பு தேவைப்படாது என்றே நம்பப்படுகிறது. இருப்பினும், உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் அதற்கு அரசாங்கம் முழுமையாகக் கட்டுப்பட்டுச் செயற்படும்.