திருகோணமலை மதுபானசாலை ஆயுதக் கொள்ளை – ஒரு மணிநேரத்தில் சிக்கிய சந்தேகநபர்கள் !


திருகோணமலை அனுராதபுர சந்திக்கு அருகிலுள்ள மதுபானசாலை ஒன்றில் நேற்று (18) இரவு இடம்பெற்ற ஆயுதக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்குள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு 9.45 மணியளவில் மதுபானசாலைக்குள் நுழைந்த இருவர் T-56 ரக துப்பாக்கியைக் காட்டி ஊழியர்களை அச்சுறுத்தி, பணத்தை கொள்ளையிட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட திருகோணமலை பொலிஸார், உப்புவெளி பொலிஸ் பிரிவிலுள்ள தற்காலிக தங்குமிடம் ஒன்றில் வைத்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உப்புவெளி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் எனவும், அவர் கிளிபுஞ்சிமலை பகுதியில் உள்ள வெடிபொருள் களஞ்சியத்தில் கடமையாற்றி வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

54 மற்றும் 61 வயதுடைய சந்தேகநபர்கள் ஹக்மன பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் 11,500 ரூபா பணம், மோட்டார் சைக்கிள், T-56 துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்கள் அடங்கிய மகசின் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.