2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவரை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சானக தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (24) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் நாட்டில் சட்டத்தைச் செயற்படுத்துவதில் பாரபட்சமான மற்றும் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. நிலக்கரி ஊழல் மற்றும் பாரிய நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய அரசாங்கத் தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் மாத்திரம் இலக்கு வைத்து கைது செய்யும் பழிவாங்கும் படலம் முன்னெடுக்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பதவிகளிலும் பொலிஸ் துறையிலும், கடந்தகாலங்களில் மேடைகளில் இயங்கிய நபர்களே நியமிக்கப்பட்டுள்ளதால், இத்தகைய சூழலில் சுதந்திரமான நீதித்துறையையோ நியாயத்தையோ எதிர்பார்க்க முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைப்பதன் மூலம் அல்லது அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்வதன் மூலம் மக்களின் குரலையும் எதிர்ப்புகளையும் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது.
அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையிலும், நாட்டில் நடக்கும் ஊழல்களை எதிர்த்தும் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான போராட்டங்களையும் மக்கள் திரள் கூட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய அரசியல் சூழலில் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாமல் ராஜபக்ஷவின் தலைமையை எதிர்பார்ப்பத்துள்ளனர்.
அவரை அரசியல் ரீதியாக முடக்கவும் எதிர்காலத் தேர்தல்களில் இருந்து புறந்தள்ளவும் மேற்கொள்ளப்படும் அனைத்துச் சதித் திட்டங்களையும் சட்டத்தின் முன்னும் மக்களின் போராட்டங்கள் மூலமாகவும் வெற்றிகரமாக முறியடிப்போம்.





.jpg)




.jpg)


