ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை வெளியிட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு


முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் டிசைன் பொயின்ட் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமந்த லலித் டி சில்வா ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் புரிந்தமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கொல்லையில் அமைந்துள்ள ராஜபக்ஷ மண்டபத்திற்குக் கதிரைகளை கொள்வனவு செய்தபோது, உரிய பெறுகை நடைமுறைகள் மீறப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

தகுதியான மிகக் குறைந்த விலைமனுவைச் சமர்ப்பித்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்காமல், டிசைன் பொயின்ட் தனியார் நிறுவனத்திடமிருந்து கதிரைகளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்கு 7,973,114 ரூபாய் 50 சதம் நிதி இழப்பு ஏற்பட்டதுடன், வெளித் தரப்பொன்றுக்கு முறையற்ற நன்மை வழங்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.