அனோஜனை காப்பாற்ற இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடு – அமைச்சர் விஜித்த ஹேரத்


சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை முன்னிலைப்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவேற்றம் செய்வதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில், சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனை பகுதியைச் சேர்ந்த அனோஜன் விவகாரம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கதிர்காமம் பாதயாத்திரை சென்ற குழுவுடன் இருந்த நாயின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.இவ்வாறான பின்னணியில் சவூதியில் தொழில் புரிந்த கல்முனை பகுதியை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த கருத்தால் இன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இளைஞரான அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துடன் அமைச்சின் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.

அனோஜன் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவேற்றம் செய்வதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் முழுமையான நடவடிக்கைகளை இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம்.நாடு என்ற அடிப்படையில் இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இன நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்றார்.