தற்போது பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அனைவரும் ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவர்கள். நாளுக்கு நாள்; அதிகரித்து வரும் பாதாள உலகச் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். அவை நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாளுக்கு நாள் பாதாள உலகச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். பாதாள உலகச் செயற்பாடுகள் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.
தற்போது பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அனைவரும் ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவர்கள். இந்த நாட்களில் அவர்களைப் பற்றி அதிகமாகப் பேசப்படுவதுடன், அவர்களின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களையும் அதிகமாக அறிந்துகொள்ள முடிகிறது.
அழுத்தம் அதிகரிக்கும் போது இவர்களின் செயற்பாடுகளும் அதிகரிக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆர்வத்துடன் செயற்படுவதாக நான் கருதுகின்றேன். அதனால் நாம் மகிழ்ச்சியடைய முடியும். சிலரைக் குறித்து நான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது மீண்டும் அதே நபர்கள் தொடர்பில் பேசப்படுகின்றனர்.
இந்த விசாரணைகளில் விரைவில் முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.
இந்த நடவடிக்கைகள் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன என்றும், தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்ப அரசாங்கம் செயற்படுகின்றது என்றும் சிலர் கூறுகின்றனர்.
புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான கூற்றுகள் பேசுவதற்காகப் பேசப்படும் விடயங்களாகவே எனக்குத் தெரிகின்றன. பேராயர் மல்கம் ரஞ்சித் தனது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அரசாங்கம் இதுவரையில் சரியான பாதையில் செல்வதாகவே நான் கருதுகின்றேன்.
ராஜபக்ஷகுடும்பத்தினர் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிவருகின்றன. ஷிரந்தி ராஜபக்ஷ வெளிநாட்டுக்குச் சென்றிருப்பது தொடர்பிலும் பேசப்படுகிறது. அவரைப் பற்றி நான் முன்னர் ஒருபோதும் பேசியதில்லை. ஆனால் ராஜபக்ஷ குடும்பத்தின் ஒட்டுமொத்த பரம்பரையும், தந்தைகள், மாமன்மார்கள், மூத்தவர்கள், மருமகன்கள் மற்றும் மகன்கள் உள்ளிட்ட பலரும் நாட்டைச் சூறையாடியதாக நான் கூறியுள்ளேன்.
அவர்கள் செய்த செயல்கள் தொடர்பில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பிலும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டவிரோதமாக பணம் தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தால், அதற்கும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்.
நாமல் ராஜபக்ஷவை, 2029ஆம் ஆண்டு நாட்டை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என யாராவது நினைத்தால், அது நாட்டில் எவரும் விரும்ப வேண்டிய முட்டாள்தனமான செயலாகும். அவர் செல்ல வேண்டிய பாதை அவருக்கு திறந்தே உள்ளது. அவர் விரைவாக அந்தப் பாதையில் செல்வார்.
தற்போதைய அரசாங்கத்துக்கு இன்னும் மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் உள்ளது. நீண்டகாலமாக வீழ்ச்சியடைந்த நாட்டை ஓரிரு வருடங்களில் எந்த அரசாங்கத்தாலும் முழுமையாகக் கட்டியெழுப்ப முடியாது.
எனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசாங்கத்துக்கு அதன் ஐந்து வருட காலத்தையும் வழங்க வேண்டும். அந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அவர்களின் பொறுப்பாகும் என்றார்.






.jpg)



.jpg)


.jpg)