மின்சார விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை - மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க


நாட்டில் தடையற்ற வகையில் மின்சார விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை என மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு அண்மையில் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான நிலக்கரி தங்கு தடையின்றி இறக்குமதி செய்வதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என சமூக ஊடகங்களிலும் சில தரப்பினராலும் பரப்பப்பட்டு வரும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை.

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி இருப்பு வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்ற செய்திகளை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

தடையற்ற மின்சார விநியோகத்தை பராமரிப்பதற்கு தேவையான போதிய நீர்மின் உற்பத்தி தற்போது உள்ளதாக பொதுமக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி இருப்பு குறைந்துள்ளதன் காரணமாக, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி மூலமான மின் உற்பத்தியை தற்காலிகமாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும், இந்த நிலைமை ஒட்டுமொத்த மின்சார விநியோகத்தையும் எந்த வகையிலும் பாதிக்கவில்லை.

இலங்கையை வந்தடையவுள்ள இரு நிலக்கரி கப்பல்களில், முதலாவது கப்பல் வெள்ளிக்கிழமை (04), இரண்டாவது கப்பல் செப்டம்பர் 12ஆம் திகதியும் நாட்டை வந்தடையவுள்ளன. குறித்த இரு கப்பல்களிலிருந்தும் நிலக்கரி இறக்கப்பட்டதும், வழக்கமான நிலக்கரி மின் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பும்.

எனவே, மின்வெட்டுக்கான எந்தவொரு தேவையும் தற்போது இல்லை என்பதால், நிலக்கரி இருப்பு குறைவு தொடர்பில் பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை, என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தியில் பாரிய சவால் ஏற்பட்டுள்ளதாக முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை மீண்டும் அதிகரிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் (PUCSL) கோரிக்கை ஒன்றை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.