திருகோணமலை மதுபானசாலையில் ஆயுத முனையில் கொள்ளை


திருகோணமலை, அனுராதபுர சந்திப் பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றிற்குள் நேற்று (18) இரவு சுமார் 9.45 மணியளவில் T-56 ரக துப்பாக்கியுடன் புகுந்த இருவர், ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்களும், மதுபானசாலை ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை வழங்குமாறு கூறியதுடன், காசாளர் பகுதியில் இருந்த பை ஒன்றில் பணத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பணம் அடங்கிய பையை வைத்திருந்த சந்தேகநபரை ஊழியர் ஒருவர் பிடிக்க முயன்றபோது, துப்பாக்கியை வைத்திருந்த மற்றைய சந்தேகநபர் ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் அங்கிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் பின்னர் மிஹிந்துபுர பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.