கொழும்பில் வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாற்றச் செயல்பாட்டில் முறையான திட்டமிடல் மற்றும் நிர்வாகத் தெளிவு இன்மை காரணமாகப் பாரிய குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றத்தைக் கோரி 11,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும், 2007 ஆம் ஆண்டைய தேசிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக இந்நடைமுறைகளைச் சரியாக முன்னெடுப்பதற்கான தெளிவான வேலைத்திட்டத்தைக் கல்வி அமைச்சு இதுவரை உருவாக்கவில்லை.
இதனால் இடமாற்றச் சபைகளின் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர் தொழற்சங்கங்கள் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. கடந்த ஆண்டில் ஒரே பாடசாலையில் 9 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களைக் கூறி 315-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதுவரை புதிய பாடசாலைகளுக்குச் செல்லாமல் பழைய இடங்களிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இவர்களைப் புதிய இடங்களுக்கு இடமாற்றுவதில் கல்வி அமைச்சு முறையான நடவடிக்கைகளை எடுக்காததால், நியாயமான முறையில் இடமாற்றம் எதிர்பார்க்கும் ஏனைய ஆசிரியர்களின் வாய்ப்புகள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன.
மேலும், இடமாற்றச் சபைகளின் முடிவுகளுக்கு எதிராக அரச சேவை ஆணைக்குழுவிடம் மேல்முறையீடு செய்த ஆசிரியர்களுக்கான பதில்கள் இன்னும் வழங்கப்படவில்லை. அத்துடன், பல ஆசிரியர்களின் விண்ணப்பப் படிவங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் ஆவணக் குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையிலும் இந்தச் செயல்முறை நிறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் ஆசிரியர் இடமாற்றத்திற்காகவே பிரத்தியேகப் பிரிவும், பணிப்பாளர்களும் இயங்கி வருகின்ற போதிலும், தரவுகளைச் சரியாகப் புதுப்பிக்காததே இந்த அனைத்துக் குழப்பங்களுக்கும் முதன்மைக் காரணமாகும்.
இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், இடமாற்றம் பெற்றும் செல்லாமல் இருக்கும் ஆசிரியர்களை உடனடியாகப் புதிய இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இடமாற்றத்திற்கான ஆவணங்களை முறைப்படி புதுப்பிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்-அதிபர் கூட்டமைப்பு கல்வி அமைச்சின் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளது.
ஆசிரியர்களின் நலன் கருதி, நிலுவையில் உள்ள பிரச்சனைகளை உடனடியாகத் தீர்த்து, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய இடமாற்றச் செயல்பாட்டை விரைந்து மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.




.jpg)






.jpg)

