நீதிமன்ற வழக்கு நிலுவையிலுள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்துங்கள் – சாணக்கியன் வலியுறுத்தல்



நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி செல்வாநகர் மயானக்காணியில் இடம்பெறும் அத்துமீறிய காணி அடைப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன், குறித்த பகுதிக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுவதையும் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றபோது, ஆரையம்பதி செல்வாநகர் மயானக்காணி தொடர்பான பிரச்சினை முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த மயானக்காணி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அப்பகுதியில் காணிகளை அத்துமீறி அடைப்பதும், அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதும் சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும் என சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழ்நிலையில் குறித்த மயானக்காணிக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுவதும், அத்துமீறி அடைக்கப்பட்ட காணிகளில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதும் நீதிமன்ற செயற்பாடுகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடாக அமைவதுடன், நீதிமன்றத்தை அவமதிக்கும் நிலைமையை ஏற்படுத்தக்கூடியது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே, நீதிமன்ற வழக்கு நிறைவடையும் வரையில் குறித்த காணியில் இடம்பெறும் அத்துமீறிய காணி அடைப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதுடன், அப்பகுதிக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுவதைத் தடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, ஆரையம்பதியை நகரமாக்கும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, சிறுகைத்தொழில் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு வழங்கி, அக்காணியில் கடைத்தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பாக கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.

எனினும், குறித்த காணியை பிரதேச சபைக்கு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆரையம்பதி நகர அபிவிருத்திக்குத் தேவையான அந்தக் காணியைப் பெற்றுக் கொள்வது தொடர்பான பிரச்சினையை மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்வைத்து, உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

ஆரையம்பதியை நகரமாக்கும் செயற்பாடுகளில் மக்கள் நலனையும் பிரதேசத்தின் எதிர்கால தேவைகளையும் கருத்திற்கொண்டு தேவையான அரச காணிகளை உரிய முறையில்

பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, தமிழர்களின் வரலாறுகள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

உலகநாச்சியார் கோவில் தொடர்பான அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னர், அப்பகுதியுடன் தொடர்புடைய வரலாற்றுத் தகவல்கள் மற்றும் வரலாற்று ஆதாரங்கள் முழுமையாக மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஹேமமாலா தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவை உலகநாச்சியாரின் வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படுவதால், குறித்த வரலாற்றுத் தகவல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்த பின்னரே அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது பொருத்தமானது என அவர் தெரிவித்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் போது, அப்பகுதியின் வரலாற்றுப் பின்னணி, தொல்லியல் ஆதாரங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வரலாற்று உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் உரிய முறையில் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தினார்.

மேலும், ஆரையம்பதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஆயுர்வேத வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வைத்தியசாலையின் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்கு தேவையான ஆளணியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோன்று, மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியில் நிலவும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Wastewater Treatment Plant) தொடர்பான பிரச்சினையும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த பிரச்சினைக்கு உரிய தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து, கல்வியற் கல்லூரியின் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இப்பிரச்சினைகளுக்கு வெறுமனே கூட்டங்களில் தீர்மானங்களை மேற்கொள்வதுடன் நின்றுவிடாமல், நடைமுறையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் உரிய முன்மொழிவுகளைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து, பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மக்களின் அன்றாட வாழ்வுடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, காலதாமதமின்றி நடைமுறைத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

“மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கூட்டங்களில் பதிவு செய்வதுடன் நின்றுவிடாமல், அவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம்” என சாணக்கியன் இதன்போது வலியுறுத்தினார்.

மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைத் தேவைகளை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், பிரதேசத்தின் நீண்டகால அபிவிருத்திக்குத் தேவையான திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், மண்முனைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் மு.முத்துக்குமார், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைசார் அரசஅதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஆரையம்பதி செல்வாநகர் மயானக்காணி தொடர்பான பிரச்சினை முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது.

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குறித்த ஆரையம்பதி மயானக்காணிக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுவதும், அத்துமீறி அடைக்கப்பட்ட காணிகளில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆரையம்பதியை நகரமாக்கும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, சிறுகைத்தொழில் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை பிரதேச சபைக்கு வழங்கி, அக்காணியில் கடைத்தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.

எனினும், குறித்த காணியை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்காணியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான பிரச்சினையை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்வைத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை, தமிழர்களின் வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். உலகநாச்சியார் கோவில் தொடர்பான அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு முன்னர், அப்பகுதியின் வரலாற்றுத் தகவல்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஹேமமாலா தொடர்பான வரலாற்றுத் தகவல்களும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவை உலகநாச்சியாரின் வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படுவதால், வரலாற்று ஆதாரங்களை விரிவாக மீளாய்வு செய்த பின்னரே அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது பொருத்தமானது என அவர் தெரிவித்தார்.

மேலும், ஆயுர்வேத வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை, மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியின் கழிவுநீர் சுத்திகரிப்பு (Wastewater Treatment Plant) தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் உரிய முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப்போக்குவரத்து, பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள் மற்றும் பிரதேசஅபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

“மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கூட்டங்களில் பதிவு செய்வதுடன் நின்றுவிடாமல், அவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம்” என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், மண்முனைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் மு. முத்துக்குமார், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.