
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் அமைந்துள்ளதும், அதிக கஷ்டப் பிரதேச பாடசாலையான பெரியபுல்லுமலை R.C.T.M. பாடசாலையில் கணினிக் கூடம் திறப்பு விழா, மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அத்துடன் வெள்ளைப் பலகைகள் (Whiteboards) கையளிக்கும் நிகழ்வு நேற்று (03.09.2026) பாடசாலை அதிபர் திரு. சந்திரவர்ணன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
எல்லைக் கிராமத்தில் அமைந்திருக்கும் இப்பாடசாலையில் போதிய அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்து வந்தனர். இப்பாடசாலையின் நிலமையைக் கருத்திற் கொண்டு, மாணவர்களின் நவீன டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் "ஒரு பானை" (Oru Paanai) தர்ம ஸ்தாபனத்தின் தலைவர் கௌரவ சுவாமிநாதன் ஐயா அவர்களின் வழிகாட்டலிலும், இலங்கையின்கீழ் சேவையாற்றி வரும் திரு. சாந்தகுமார் ஐயா அவர்களின் முன்னின்று செய்த முயற்சியினாலும், திரு. ராம் சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நவீன வசதிகளுடன்கூடிய கணினி ஆய்வுகூடம் இதன்போது உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இச்செயற்றிட்டம் இப்பாடசாலைக்குக் கிடைப்பதற்கு "நம்மவர் கல்வி அபிவிருத்தி" அமைப்பின் இணைப்பாளர் ஆசிரியர் திரு. ஜே. மேவின் அவர்கள் முக்கிய பாலமாக இருந்து செயற்பட்டிருந்தார்.
அத்துடன், பாடசாலையின் ஏனைய தேவைகளைக் கருத்திற் கொண்டு பல கொடையாளர்களினால் பின்வரும் உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன:
விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கபட்: கனடாவைச் சேர்ந்த சமூக சேவையாளர் டொக்டர் ஜீவா அவர்கள் இணைப்பாளராகச் செயற்பட்டு இப் பொருட்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார். இதற்கமைய டொமினிக் தம்பிப்பிள்ளை, சுதாகர் பாக்கியநாதன், சதீஷ் வல்லிபுரம் மற்றும் டொக்டர் K. ஜீவகுமார் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் தரம் 5 மாணவர்களின் நலன் கருதி சிறிய கபட் (Cupboard) ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளைப் பலகைகள் (Whiteboards): கனடா, ஒன்ராறியோவைச் சேர்ந்தசமூக சேவையாளரும் தொழில் அதிபருமாகிய திரு. செல்லத்துரை வெற்றிவேல் அவர்களின் அனுசரணையில் வகுப்பறைகளுக்காக 6 வெள்ளைப் பலகைகள் கையளிக்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட வேலன் இலவச கல்வி நிலையத்தின் தலைவர் ஐயா தவராஜா அவர்கள், மாணவர்களினதும் பாடசாலையினதும் சூழலைக் கவனத்திற் கொண்டு, அப்பாடசாலை மாணவர்களுக்காக ஒரு விசேட இலவசப் பிரத்தியேக கல்வி நிலையத்தை அமைத்துத் தருவதற்கு முன்வந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். "ஒரு பானை" அமைப்பினரின் இந்த உன்னதமான கைங்கரியத்தின் ஊடாகவும் ஏனைய கொடையாளிகளின் அர்ப்பனிப்பாலும் இப்பாடசாலைக்கு மேலும் ஒரு விசேட கல்விச் சேவை கிடைக்கப்பெறவுள்ளது அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்நிகழ்வினை மிக நேர்த்தியாக ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டதுடன், எல்லைக் கிராமத்து மாணவர்களின் கல்விச் சுடரை ஏற்றிவைத்த "ஒரு பானை" அமைப்பிற்கும், ஏனைய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் பாடசாலைச் சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.












.jpg)


.jpg)

.jpg)

