போலியான SLS முத்திரையுடன் குடிநீர் விற்பனை: 8,500க்கும் மேற்பட்ட போத்தல்கள் அழிப்பு
போலியான இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLS) முத்திரை மற்றும் தவறான வர்த்தகப் பெயரைப் பயன்படுத்தி போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை உற்பத்தி செய்து விநியோகித்த நிறுவனமொன்றுக்கும் அதன் பணிப்பாளருக்கும் எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
அவிசாவளை, சீதாவக்க பகுதியில் இயங்கிய குறித்த நிறுவனத்தை 2026 ஆகஸ்ட் 21ஆம் திகதி அதிகாரிகள் சோதனையிட்டனர். சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட “Lanka Premium” என்ற பெயருக்குப் பதிலாக, “Aquachill” என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்ட 8,500க்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
19 லீற்றர், 5 லீற்றர், 1,500 மில்லிலீற்றர், 1,000 மில்லிலீற்றர் மற்றும் 500 மில்லிலீற்றர் அளவுகளிலான போத்தல்கள் இதில் உள்ளடங்கியிருந்தன.
இது தொடர்பான வழக்கு செப்டெம்பர் 4ஆம் திகதி அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிறுவனமும் அதன் பணிப்பாளரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அதனையடுத்து இருவருக்கும் மொத்தமாக 40,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், வழக்குப் பொருட்களாகச் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து குடிநீர் போத்தல்களையும் அழிக்குமாறும் உத்தரவிட்டது. அதற்கமைய அவை நீதிமன்ற வளாகத்தில் அழிக்கப்பட்டன.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கொள்வனவு செய்யும்போது சரியான வர்த்தகப் பெயர், உற்பத்தித் திகதி, காலாவதித் திகதி மற்றும் உத்தியோகபூர்வ SLS தரச்சான்று முத்திரை ஆகியவற்றைக் கவனமாகச் சரிபார்க்குமாறு நுகர்வோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மோசடியான அல்லது சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கலாம்.




.jpg)






.jpg)

.webp)