அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் வாடும் 1,454 கைதிகள் – நீதி அமைச்சர் தகவல் !



அபராதப் பணத்தைச் செலுத்த முடியாத காரணத்தினால் சுமார் 1,500 கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வாய்மொழி விடை எதிர்பார்க்கும் வினாவாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையிலான அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் 421 கைதிகள் சிறையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,

"கைதிகளின் எண்ணிக்கை 10,611 ஆகும். சந்தேகநபர்களின் எண்ணிக்கை 28,408 ஆகும். வயதுக் குழுக்களின் அடிப்படையில் கைதிகளின் எண்ணிக்கை: 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 2,160 பேர், 30-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 3,423 பேர், 40-50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 2,860 பேர், 50-60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 1,561 பேர், 60-70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 601 பேர், 70-80 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 150 பேர், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 பேர். அபராதம் செலுத்த வேண்டிய கைதிகளின் மொத்த எண்ணிக்கை 1,454 ஆகும்.

10,000 முதல் 15,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த முடியாமல் 421 பேர் உள்ளனர். 15,000 முதல் 25,000 ரூபாய் வரை செலுத்த முடியாமல் 220 பேர் உள்ளனர். 25,000 முதல் 50,000 ரூபாய் வரை செலுத்த முடியாமல் 361 பேர் உள்ளனர். 50,000 முதல் 100,000 ரூபாய் வரை செலுத்த முடியாமல் 245 பேர் உள்ளனர். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் 207 பேர் உள்ளனர். இதன் மொத்தக் கூட்டுத்தொகை 1,454 ஆகும்." என்றார்.

குறித்த கைதிகளை விடுவிப்பது தொடர்பான வேலைத்திட்டம் ஏதேனும் அரசிடம் உள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதன்போது வினவியதற்கு, அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பின்வருமாறு பதிலளித்தார்.

"அபராதத்தைச் செலுத்த முடியாமல் சிறையில் இருக்கிறார்கள் என்பது பெரிய குற்றமாக இருக்க முடியாது. அபராதத்தைச் செலுத்த முடியாத நிலையினாலேயே அவர்கள் உள்ளனர். தற்போதும் கூட பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட கைதிகளின் அபராதத் தொகையைச் செலுத்தி அவர்களை வெளியே எடுக்கும் வேலைத்திட்டம் காணப்படுகிறது. அதேபோல் எதிர்காலத்திலும் எவரேனும் விரும்பினால் அதற்குச் சிறைச்சாலைத் துறை தடை விதிக்காது, எந்தவொரு அரசாங்க அல்லது அரசாங்க சார்பற்ற நிறுவனமும் அந்த நபர்களை வெளியே எடுக்க முடியும்." என்றார்.