
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையிலுள்ள சீடி சிமுலேட்டர் (CT Simulator) இயந்திரம் செயற்படாமையினால், கதிர்வீச்சு சிகிச்சையைப் (Radiation Therapy) பெறவேண்டிய நோயாளிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அரச கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகச் சுமார் 1,500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலையிலிருந்த பழைய சீடி சிமுலேட்டர் இயந்திரத்துக்குப் பதிலாக புதிய இயந்திரமொன்று நிறுவப்பட்டுக் கடந்த மாதம் வைத்தியசாலை ஊழியர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், புதிய இயந்திரத்தின் மென்பொருளானது (Software) கதிர்வீச்சு திட்டமிடலுக்குப் பயன்படுத்தப்படும் மென்பொருளுடன் பொருந்தாததால் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கதிர்வீச்சு சிகிச்சையைத் தனியார் துறையினரிடம் இருந்து பெறுவதற்கு ஒரு நோயாளிக்கு 5 இலட்சம் முதல் 20 இலட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியேற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்திற்குப் பின்னர் பழைய இயந்திரம் அகற்றப்பட்டு புதிய இயந்திரம் நிறுவப்பட்டது. ஆனால் இதுவரை அதன் சோதனைக் கட்டத்தைக்கூட ஆரம்பிக்க முடியவில்லை.
இதனால் லீனியர் அக்சலரேட்டர் (Linear Accelerator) கதிர்வீச்சு சிகிச்சைகளைத் தொடங்க முடியாத நிலை காணப்படுகிறது.
இது குறித்துச் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்குப் பல மாதங்களாகத் தெரிவித்தும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.
அறுவை சிகிச்சை அல்லது இரசாயன சிகிச்சைக்குப் (Chemotherapy) பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் புற்றுநோய் செல்களை அழிப்பதில் தீவிர சிக்கல்கள் ஏற்படும். எனவே, இதற்கு உடனடியாகத் தீர்வு காண்பது அத்தியாவசியமானது" எனத் தெரிவித்தார்.










.jpg)

