
நாட்டின் முன்பள்ளிகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2027ஆம் ஆண்டு முதல் தேசிய தரநிலைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான புதிய இலக்குகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களினதும் 2026ஆம் ஆண்டு இதுவரையான முன்னேற்றங்கள் மற்றும் 2027ஆம் ஆண்டில் அடைய எதிர்பார்க்கப்படும் புதிய இலக்குகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
குழந்தைகளின் போஷாக்கு, கல்வி மற்றும் பராமரிப்பு தொடர்பான இலக்குகளை அடையும் வகையில், 2027ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் ஆரம்பப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவகத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
அத்துடன், இலங்கை தர நிர்ணய நிறுவனத்துடன் இணைந்து முன்பள்ளிகள் உள்ளிட்ட ஆரம்பப் பருவ அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய தரநிலைகளை அறிமுகப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கிளின் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் இணைந்து இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செட்-அப் திட்டத்தின் அடுத்த கட்டம் 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
முன்பள்ளிக் குழந்தைகளின் நடத்தை மேம்பாடு மற்றும் நேர்மறையான மனப்பாங்கை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
2025ஆம் ஆண்டு ஆரம்பப் பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பப் பருவக் கல்வியை முறையான கல்வி நிலையாக மாற்றும் நடவடிக்கைகள் 2027ஆம் ஆண்டில் முக்கிய கட்டத்தை எட்டும் என தெரிவித்துள்ளார்.











.jpg)
