முஸ்லிம் பெயர்களில் போலிக் கணக்குகள் உருவாக்கி பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு மிரட்டல் – 21 வயது இளைஞர் கைது!



இலங்கையின் முக்கிய பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, தூபாராமய, ஸ்ரீ மகா போதி மற்றும் தம்புள்ளை விகாரை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஐந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் முஸ்லிம் பெயர்களைப் பயன்படுத்திப் போலியான சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி, அச்சுறுத்தல் செய்திகளைப் பரப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன, மத வேறுபாடின்றி மத மற்றும் இன வெறுப்புணர்வைத் தூண்டும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.