பயிற்சியை நிறைவு செய்த 234 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிவைப்பு !



தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அதன் சமூக உற்பத்தித்திறன் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட “பாலர் பாடசாலைகளுக்கான திறன்மிகு உற்பத்தித்திறன் இணையவழிப் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த 234 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா, அண்மையில் பத்தரமுல்லவில் உள்ள இசுருபாய அரங்கில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

பாலர் பாடசாலை கல்வியாளர்களிடையே உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், உயர்தர கற்பித்தல் முறைகளை ஊக்குவிப்பதற்கும், வகுப்பறை முகாமைத்துவம், படைப்பாற்றல், தகவல் தொடர்பு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் அத்தியாவசியத் திறன்களை வளர்ப்பதற்குமாகவே இப் பயிற்சித் திட்டம் சிறப்புற வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, ஒரு புதிய நாட்டை உருவாக்குவதற்கு வெறும் அரசாங்கத்தையோ அல்லது ஆட்சி முறையையோ மாற்றுவதை விட மேலான நடவடிக்கைகள் தேவை.

உண்மையான தேசிய மாற்றமானது, முற்போக்கான மனப்பான்மைகள், நேர்மறையான அணுகு முறைகள் மற்றும் வலுவான மனித விழுமியங்களைக் கொண்ட சிறந்த குடிமக்களை வளர்ப்பதிலேயே தங்கியுள்ளது. இந்த அடிப்படை மாற்றத்திற்கு பாலர் பாடசாலை கல்வியே அடித்தளமாக அமைகிறது.

குறிப்பாக, மூன்று முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டம் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் முக்கிய கட்டமாகும் என்பதால், பாலர் பள்ளி கற்பித்தலை வெறும் சம்பளம் ஈட்டுவதற்கான ஒரு தொழிலாகக் கருதாமல், நாட்டின் எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் விலைமதிப்பற்ற தேசியப் பொறுப்பாக ஆசிரியர்கள் உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், எண்கள் மற்றும் எழுத்துக்களை வெறுமனே மனப்பாடம் செய்யும் பழைய கற்பித்தல் முறையிலிருந்து பாலர் பள்ளிகள் விலக வேண்டும். அதற்குப் பதிலாக, குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபாடுள்ள செயல்பாடுகள் மூலம் இயல்பாகக் கற்கும், படைப்பாற்றல் சிந்தனையை வளர்க்கும் மற்றும் அர்த்தமுள்ள அனுபவங்கள் வாயிலாக நடைமுறை வாழ்க்கைப் புரிதலைப் பெறும் சூழல்களாக பாலர் பாடசாலை மாற வேண்டும்.

ஆசிரியர்களின் உற்பத்தித்திறன் கொள்கைகளும் நேர்மறையான பழக்கவழக்கங்களும் இயல்பாகவே அவர்களின் மாணவர்களிடம் பிரதிபலிக்கும் என்பதால், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டிலும் உள்ள ஒட்டுமொத்த பாலர் பாடசாலைத் துறையையும் உயர் தரத்திற்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இக்கூட்டு முயற்சியானது, அறிவு, நடைமுறைத் திறன்கள், நேர்மறையான மனப்பான்மை மற்றும் மனித விழுமியங்களில் வேரூன்றிய பன்முகத் திறன் கொண்ட குடிமக்களை உருவாக்கும் நோக்கில் 2027-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள தேசியக் கல்வி சீர்திருத்தங்களுக்கு நேரடியாக ஆதரவளிப்பதாக அமைந்துள்ளது என்றார்.