23ஆம் திகதி பௌத்த துறவி ஆடையுடன் நீதிமன்றில் முன்னிலையாகிறார் ஞானசார தேரர் !



திருத்தப்பட்ட புதிய சட்ட விதிமுறைகளின்படி, எதிர்வரும் 23-ஆம் திகதி ஞானசார தேரர் பௌத்த துறவி ஆடையுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரருக்கு எதிரான சிறைத்தண்டனை உத்தரவைத் தொடர்ந்து, அவர் சார்ந்திருக்கும் பிரிவின் மகாநாயக்க தேரருக்கு பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் இது தொடர்பாக எழுத்து மூலம் அறிவித்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனைகளையும் கோரியுள்ளார்.

இவ்விவகாரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக விவாதங்களின் பின்னணியில், பிக்குகள் சிறை செல்ல நேரிடும் போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான உத்தரவுகள் உடனடியாகத் திருத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 356 மற்றும் 550 ஆகிய பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திருத்தங்களின்படி, சிறைவாசம் அனுபவிக்கும் பிக்கு ஒருவரின் ஆடை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது என்பதோடு, பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்து, சம்பந்தப்பட்ட நிகாயாவின் மகாநாயக்க தேரர்கள் அல்லது சங்க சபையின் ஆலோசனையைப் பெற்று முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் மூலம், இரண்டு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டிய இச்சட்டத் திருத்த நடவடிக்கை வெறும் ஆறு நாட்களில் விரைவாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் ஒரு நற்பெயரைக் காக்கும் நடவடிக்கையாகவும், எதிர்காலத்தில் பிக்குகள் சிறை செல்லும் சூழல்களில் சங்க சபையின் வழிகாட்டலைப் பெற்று முறையான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் வழிவகுக்கும் என்றார்.