தித்வா நிவாரணக் கொடுப்பனவில் குழப்பம்: ரூ.3 இலட்சத்திற்குப் பதிலாக ரூ.2 இலட்சம் வழங்கப்பட்டதாக மக்கள் அதிருப்தி



தித்வா வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிவாரணங்களை வழங்கி வருவது பாராட்டுக்குரிய விடயம் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், பதுளை மாவட்ட செயலகத்தில் நேற்று (08) வியாழக்கிழமை நடைபெற்ற நிவாரணக் கொடுப்பனவு நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பயனாளிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகைக்கும், நேற்றையதினம் வழங்கப்பட்ட காசோலைகளில் குறிப்பிடப்பட்டிருந்த தொகைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்பட்டதாக பயனாளிகள் தெரிவித்தனர்.

தித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு அரச அதிகாரிகள் நேரடியாகச் சென்று சேதங்களை பார்வையிட்டு, அவை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னர் நிவாரணத் தொகை வகைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, வீடு முழுமையாக சேதமடைந்திருந்தால் ரூ.50 இலட்சம் வரையிலும், பகுதியளவில் சேதமடைந்திருந்தால் சேதத்தின் அளவுக்கேற்ப நிவாரணத் தொகை தீர்மானிக்கப்படும் என அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டிருந்ததாக பயனாளிகள் கூறுகின்றனர்.

அதேவேளை, வீடுகளின் பிரதான கட்டமைப்புக்கு சேதம் ஏற்படாமல், கதவு, ஜன்னல், மின்சார வயர்கள், சுவிட்சுகள், பெயிண்ட் உள்ளிட்டவை சேதமடைந்தவர்களுக்கு ரூ.5 இலட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ரூ.5 இலட்சத்தை விட அதிகமான நிவாரணம் தேவைப்படுவதாக கருதுபவர்கள் தமது சேத விபரங்களை எழுத்துமூலம் சமர்ப்பித்து, புகைப்பட ஆதாரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் மேலதிக மதிப்பீட்டைக் கோரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், இந்த மேலதிக மதிப்பீட்டு நடவடிக்கை ஏனைய நிவாரணப் பணிகள் நிறைவடைந்த பின்னரே ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் அப்போது அறிவிக்கப்படவில்லை எனவும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

ரூ.5 இலட்சம் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பியவர்கள், தமது சேத விபரங்களுடன் புகைப்பட ஆதாரங்கள், காணி உறுதி அல்லது காணித் தோம்புப் பிரதிகள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்ததுடன், கிராம சேவகர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தல்களையும் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், “ரூ.5 இலட்சம் நிவாரணத் தொகையை மட்டும் பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறேன்” என தெரிவிக்கும் விருப்பக் கடிதத்தையும் சமாதான நீதவான் முன்னிலையில் உறுதிப்படுத்தி சமர்ப்பித்ததாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடைமுறைகளுக்கு இணங்க தேவையான அனைத்து ஆவணங்களையும் கிராம சேவகர் ஊடாக மாவட்ட செயலகத்திற்கு முறையாக சமர்ப்பித்த பின்னர், நிவாரணக் கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, ஆரம்ப கட்டத்தில் சில பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் முழுமையாக வழங்கப்பட்டதாகவும், பின்னர் சிலருக்கு முதற்கட்டமாக ரூ.3 இலட்சம் வழங்கப்பட்டு, மிகுதி ரூ.2 இலட்சம் பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் பயனாளிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், நேற்றையதினம் பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிவாரணக் கொடுப்பனவு நிகழ்வில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கும் அதே நடைமுறையில் முதற்கட்டமாக ரூ.3 இலட்சம் வழங்கப்படும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அமைச்சரின் உரையைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.

எனினும், காசோலைகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை பார்த்தபோது, ரூ.3 இலட்சத்திற்கு பதிலாக ரூ.2 இலட்சம் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சில காசோலைகளில் ரூ.199,975 என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் பயனாளிகள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, “ரூ.3 இலட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காசோலையில் ஏன் ரூ.2 இலட்சம் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது?” என பயனாளிகள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, குறித்த தொகையே இறுதி நிவாரணக் கொடுப்பனவு எனவும், தங்களுக்கு ரூ.2 இலட்சம் மாத்திரமே நிவாரணமாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாக பயனாளிகள் கூறுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பயனாளிகள் மண்டபத்துக்குள் கூச்சலிட்டு தமக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதன் காரணமாக நிவாரணக் கொடுப்பனவு நிகழ்வு பெரும் குழப்பமான சூழ்நிலையாக மாறியது.

தங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட தகவல்கள், சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் ஏற்கனவே சிலருக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை ஆகியவற்றை கருத்திற்கொண்டு தமக்கும் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என பயனாளிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், குறித்த பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராய்ந்து உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தி தரப்பினரால் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதும் பயனாளிகள், தாம் ஏமாற்றப்பட்டதாகவும் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்து அங்கிருந்து வெளியேறினர்.

மேலும், தங்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி பதுளை மாவட்ட செயலகத்திற்கு மீண்டும் வருகை தந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

“அரசாங்கம் நிவாரணம் வழங்க முன்வந்தமை வரவேற்கத்தக்கது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை தொடர்பில் ஒரே நடைமுறை அனைவருக்கும் பின்பற்றப்பட வேண்டும். ஒருவருக்கு ரூ.5 இலட்சமும் மற்றொருவருக்கு ரூ.2 இலட்சமும் என மாறுபட்ட முறையில் வழங்கப்படுவது தொடர்பில் தெளிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

தித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை தொடர்பான குழப்பத்திற்கு மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தெளிவான விளக்கத்தை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கோரிக்கையாக உள்ளது.