நாட்டின் நிதியியல் அறிவு 35% இலிருந்து 58% ஆக அதிகரிப்பு – பிரதமர் ஹரிணி



அரசாங்கம் மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளின் காரணமாக, இதற்கு முன்னர் 35% ஆகக் காணப்பட்ட நாட்டின் நிதியியல் அறிவை 58% ஆக அதிகரிக்க முடிந்துள்ளதாகவும், இது ஒரு நாடாக நாம் பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

உலக வர்த்தக மையத்தில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் (CSE) 40ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பிரதான நோக்கமான “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற இலக்கை உருவாக்குவதன் மூலம், பொருளாதார ரீதியாக வலுவான சூழலில் ஒவ்வொரு குடிமகனும் கௌரவத்துடனும், பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய பின்னணியை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பங்குச் சந்தையின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுதல், நிதியியல் அறிவை மேம்படுத்துதல் மற்றும் “Stock Market Game” நிகழ்ச்சியை ஆரம்பித்தல் ஆகியவற்றை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், 40ஆவது ஆண்டு நிறைவு நினைவு அஞ்சல் உறையும் முத்திரையும் வெளியிடப்பட்டன. அத்துடன், பங்குச் சந்தை வர்த்தக நடவடிக்கைகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் பிரதமர் மணியை ஒலிக்கச் செய்தார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் பின்வருமாறு தெரிவித்தார்:

எமக்கு தேவைப்படுவது பணம் மற்றும் நிதியியல் முறைமை தொடர்பான அறிவு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நாடல்ல. நாட்டின் ஒவ்வொருව් குடிமகனும் தாம் சம்பாதிக்கும் பணத்தை முறையாக நிர்வகிக்கவும், உரிய முறையில் சேமிக்கவும், அபாயங்களைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யவும், அதேபோன்று மோசடியான நிதி மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்குமான விழிப்புணர்வைப் பெற்றிருப்பதுமே எமது நோக்கமாகும்.

குறிப்பாக, எமது எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள பாடசாலை மாணவர்களுக்காக நாம் பாரிய முதலீட்டை மேற்கொண்டு வருகின்றோம். அதனாலேயே, புதிய பாடத்திட்டத் திருத்தங்களின் கீழ் 6ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்காக “தொழில்முயற்சியும் மற்றும் நிதியியல் அறிவும்” என்ற புதிய பாடத்துறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதேபோன்று, இன்று ஆரம்பிக்கப்படும் “Stock Market Game” மற்றும் பாடசாலை மூலதனச் சந்தை சங்கங்கள் போன்ற நடைமுறை நிகழ்ச்சிகளின் மூலம், குழந்தைகளுக்கும் இளம் தலைமுறையினருக்கும் சிறு வயதிலிருந்தே தொழில்முயற்சி நடவடிக்கைகள் மற்றும் முதலீடு தொடர்பான சரியான புரிதலை வழங்க முடியும்.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில், நாடு முழுவதும் 13 கிளைகள் வரை விரிவுபடுத்தி, மக்களிடையே நிதியியல் அறிவை கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை அரசாங்கம் என்ற வகையில் நாம் பாராட்டுகின்றோம்.

பாரம்பரிய சேமிப்பு முறைகளுக்கு அப்பால் சென்று, நாட்டின் மூலதனச் சந்தையை வலுப்படுத்துவதற்கும், இளம் தலைமுறையினருக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

எமது பிள்ளைகளிடம் நான் கூறுவது, வித்தியாசமாகச் சிந்தியுங்கள் என்பதாகும். வாய்ப்புகள் வரும் வரை காத்திருக்காமல், புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள்; வாய்ப்புகளை உருவாக்குங்கள். பரீட்சையில் மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாத்திரமன்றி, வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் சரியான நிதிப் பயன்பாட்டுப் பழக்கத்தை சமூகத்தில் உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயற்படுங்கள். என பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் டி.பி.பி.எச். திசாபண்டார உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.