எயார்பஸ் விவகாரம்: அரவிந்த டி சில்வா உள்ளிட்டோர் வழங்கிய பிணைப் பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவு



எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்காக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி வழங்கிய பிணைப் பணத்தை பறிமுதல் செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் விமான நிறுவன அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா விஜேநாயக்க, தலா ரூ.20 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பிணையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, ரூ.20 மில்லியனை இன்று செலுத்துவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதித் தொகையை செலுத்த ஒக்டோபர் 14ஆம் திகதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய பிரியங்கா விஜேநாயக்கவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனை இன்டர்போலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிணை பெற்ற பின்னர் அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கணவரின் மரணத்திற்குப் பின்னர் இலங்கைக்கு திரும்ப அஞ்சுவதாக பிணையாளர்கள் முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்தார். அவரது கணவர் உயிரிழப்பதற்கு முன்னரே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக நீதவான் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமீந்திர ராஜபக்ஷவுக்கும் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.