ஒரே ஆண்டில் 3 இலட்சத்துக்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ !



அரசாங்கத்தின் நாடளாவிய ரீதியிலான சட்டவிரோத குற்றச்சாட்டுகளை தடுக்கும் நடவடிக்கையின் கீழ், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 300,000-க்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை இலக்கு வைத்து இந்த விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025 அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் 2026 அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் , 2,485.1 கிலோகிராம் ஹெரோயின், 3,302.07 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 297.1 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் , 11,146 கிலோகிராம் கஞ்சா, 16.7 மில்லியன் கஞ்சா செடிகள் போதைப்பொருள், 1,723 கிலோகிராம் குஷ், 416 கிலோகிராம் ஹஷிஷ் மற்றும் 4.5 மில்லியன் போதை மாத்திரைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மொத்தம் 300,218 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 449 நபர்களுக்கு எதிராகச் சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், 3,749 சந்தேக நபர்களுக்கு எதிராகத் தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ளதுடன் போதைக்கு அடிமையான 2,580 நபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத குற்றச்சாட்டுகளை தடுக்கும் நடவடிக்கையின் கீழ் மொத்தமாக 303,017 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அக்டோபர் 15 வரையான காலப்பகுதியில் 16 ரி-56 ரக துப்பாக்கிகள், 42 கைத்துப்பாக்கிகள், 28 ரிவோல்வர்கள் மற்றும் 901 ஏனைய துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 987 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில் 74 ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 90 கைத்துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 2,604 துப்பாக்கிகள் சட்ட அமலாக்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத ஆயுதங்களை மீட்பது, ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்களைக் கைது செய்வது, போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வது, குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவது மற்றும் புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுப்பது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.