திருகோணமலையில் இரு பெண்கள் கடத்திக் கொ லை செய்யப்பட்ட வழக்கு – மேலும் 3 கடற்படையினர் விளக்கமறியலில் !



சில வருடங்களுக்கு முன் இரண்டு பெண்களை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, கடற்படை முகாமின் நிலத்தடி இரகசிய அறையில் உள்ள சிறையில் அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை அதிகாரிகள் 3 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருகோணமலை, பாலையூற்று பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டு பெண்கள் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

கடத்தப்பட்ட அந்த பெண்கள் திருகோணமலை கடற்படை முகாமின் “கன்சைட்” என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய அறையில் உள்ள சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டே படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் கடற்படை அதிகாரிகள் 3 பேரையும் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (19) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 3 பேரும் இன்று செவ்வாய்க்கிழமை (20) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவ்வேளை நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இதுவரை 9 கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய மேலதிக விபரங்கள்

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கடந்த 5ஆம் திகதி கடற்படை வீராங்கனைகள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, மேலும் கடற்படை வீரர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு, அவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த வழக்கில் மேலும் 3 கடற்படையினர் நேற்று கைதாகி, இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.