
சுமார் 5 கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான 'ஹஷீஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணிகள் மூவர் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 வயதுடைய இருவரும், 33 வயதுடைய ஒருவரும் எனத் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூனறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்றைய தினம் அதிகாலை 12:30 மணிக்குத் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 03 பயணப் பைகளைப் பரிசோதித்தபோது, ஒப்பனைப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் 05 கிலோகிராம் 96 கிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மூவரும் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








.jpeg)
.jpg)


