8 நாடுகளிலிருந்து வந்த 11 தபால் பொதிகளில் ரூ.6.75 கோடி போதைப்பொருட்கள் சிக்கின




வெளிநாடுகளிலிருந்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான 11 தபால் பொதிகளை அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனையிட்டபோது, 67.53 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த தபால் பொதிகள் 8 நாடுகளிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டிருந்துள்ளது, அவற்றினுள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.1 கிலோகிராமிற்கும் அதிகமான ‘குஷ்’கஞ்சா, 2,395 கிராம் எடையுடைய எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 33 கிராம் ‘மெண்டி’ ரக போதைப்பொருட்கள் என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து அனுப்பிவைக்கப்படும் தபால் பொதிகள் தொடர்பில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, கடந்த சில மாதங்களில் மேற்படி சந்தேகத்திற்கிடமான பொதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

குறித்த பொதிகளைப் பொறுப்பேற்க வேண்டிய நபர்கள் வருகை தரும் வரை அவை சுங்கப் பிரிவினரின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், உரிய காலப்பகுதிக்குள் எவரும் அவற்றைப் பெற்றுக்கொள்ள உரிமையாளர்கள் வருகைத்தராததை தொடர்ந்து, பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் அவற்றை திறந்து பார்த்து சோதனையிட சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதற்கமைய, தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய 8 நாடுகளிலிருந்து இந்தத் தபால் பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதில் தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளிலிருந்து 30.5 மில்லியன் ரூபா சந்தைப் பெறுமதியுடைய 3.1 கிலோ கிராமிற்கும் அதிகமான ‘குஷ்’ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பெல்ஜியம், பிரான்ஸ், கனடா மற்றும் ஜேர்மனியிலிருந்து வந்த பொதிகளில் 2,395 கிராம் எடையுடைய எக்ஸ்டசி மாத்திரைகளும், நெதர்லாந்திலிருந்து வந்த பொதியிலிருந்து 33 கிராம் ‘மெண்டி’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றுள் பெல்ஜியத்திலிருந்து அனுப்பப்பட்ட பொதியிலேயே அதிகளவிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்ததோடு, அதற்கமைய குறித்த பொதியிலிருந்து 2,202 கிராம் எடையுடைய எக்ஸ்டசி மாத்திரைகளின் பெறுமதி மாத்திரம் சுமார் 33.03 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.