
ரூ.80 குடிநீர் போத்தலை ரூ.100க்கு விற்பனை செய்த நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் போத்தலை விற்பனை செய்த தனியார் நிறுவனமொன்றுக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
குறித்த நிறுவனம் 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டிய 500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தலை 100 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி ஹங்வெல்ல, களுஅக்கல பகுதியில் அமைந்துள்ள லெஷர் வேர்ல்ட் (Leisure World Water Parks) பொழுதுபோக்கு பூங்காவில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
2026 ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட 2492/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, உள்நாட்டில் போத்தல்களில் அடைக்கப்படும் 500 முதல் 999 மில்லிலீற்றர் வரையான குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட எந்தவொரு வர்த்தக நிலையத்திலும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட அதிகமாக அறவிட முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பொருட்களை கொள்வனவு செய்யும்போது விலைகளைச் சரிபார்க்குமாறும், அதிக விலை அறவிடப்பட்டால் அதற்கான பற்றுச்சீட்டுகளை ஆதாரமாக வைத்திருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான விதிமீறல்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான முறைப்பாடுகளை 1977 என்ற நுகர்வோர் சேவை தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.






.jpeg)





