பொகவந்தலாவையில் கெசல்கமுவ ஆற்றில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – 8 பேர் கைது; உபகரணங்கள் மீட்பு



கெசல்கமுவ ஆற்றுப்படுக்கையில் இருந்த மாணிக்கக் கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த 8 பேர் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் விசேட பொலிஸ் குழுவினரால் இன்று வியாழக்கிழமை (8) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஆற்றின் சுற்றுச்சூழலை அழித்து, ஆற்றுக்கு அருகில் செல்லும் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று, வளி அமுக்கக் கருவி மூலம் காற்றை உட்செலுத்தி, ஆற்றுப்படுக்கையிலும் கரையோரப் பகுதிகளிலும் இவர்கள் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கை குறித்து நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமாரவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவொன்று பொகவந்தலாவை பகுதிக்கு அனுப்பப்பட்டு இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சோதனைக்காக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாணிக்கக் கல் அகழ்வுக்கும், உளவு பார்ப்பதற்கும் பயன்படுத்திய இரண்டு முச்சக்கரவண்டிகள், அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் இரத்தினபுரி, பொகவந்தலாவை மற்றும் அட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.