இனவாதம், மதவாதம் எனும் புற்றுநோயை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் – சஜித் பிரேமதாச !



நாட்டில் மீண்டும் இனம் மற்றும் மத ரீதியான மோதல்களை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதவாதம் மற்றும் இனவாதம் எனும் புற்றுநோயைக் குணப்படுத்தி அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

களுத்துறையில் இன்று வியாழக்கிழமை (15) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்புக்கமைய இலங்கை ஒரு ஒற்றையாட்சி, இறையாண்மை கொண்ட நாடாகும். அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்கிப் பாதுகாக்கப்படும் அதேவேளை, ஏனைய அனைத்து இன மற்றும் மத மக்களின் அடையாளங்களும் உரிமைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச புத்தசாசனத்திற்கு அமைச்சரவை அமைச்சை உருவாக்கியதுடன், ஏனைய மதங்களின் நலன்களுக்காக இராஜாங்க அமைச்சுக்களையும் அமைத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இனவாதத்தைப் பின்பற்றுவதில்லை; நடுநிலையான பாதையிலேயே பயணிக்கிறது.

பௌத்த பிக்குகளின் விவகாரங்கள் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானம் எடுக்கும் உரிமை மகாநாயக்க தேரர்களுக்கும் சங்க சபைகளுக்குமே உண்டு. இதில் இல்லறத்தாரோ அல்லது அரசாங்கமோ தலையிட முடியாது. பௌத்த பிக்குகள் விவகாரத்தில் கைவைத்து அரசாங்கம் பாரிய தவறிழைத்துள்ளது. இத்தவறைத் திருத்துவதற்கும் காலாவதியான சட்டங்களை மாற்றுவதற்கும் 2 வாரங்கள் காத்திருக்கத் தேவையில்லை. 24 மணிநேரத்திற்குள் தீர்மானம் எடுக்க முடியும். இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் என்பதால் பாராளுமன்றக் குழுக்கள் ஊடாகப் பொதுவான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் இன்று மக்கள் சந்திக்கும் துன்பங்களை உணராத, அரசு சார்ந்த அடக்குமுறை ஆட்சியே நிலவுகிறது. எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கி மௌனமாக்கும் சர்வாதிகார மற்றும் ஒரு கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயல்கிறது.

மேலும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தின் பிரதான தூணான நீதித்துறையின் சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் அரசாங்கம் சீர்குலைத்துள்ளது என்றார்.