ஞானசார தேரர் விவகாரம் போன்று கல்முனை வைத்தியசாலைப் பிரச்சினைக்கும் தீர்வு வழங்குங்கள் – மனோ கணேசன்!


கலகொடஅத்தே ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போன்று, கல்முனை வைத்தியசாலை மற்றும் தாதியர் தொடர்பான பிரச்சினைக்கும் உரிய சுற்றறிக்கை மாற்றங்களை மேற்கொண்டு தீர்வு வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரர் தொடர்பான விவகாரத்தில் மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சட்டத்தை வளைக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். எனினும், பின்னர் சட்டத்தில் மாற்றங்களைச் செய்து, ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு வெளியே வரும்போது தேரர்களுக்குரிய காவி உடையை அணிவதற்கான உரிமையைப் பெற்றுக்கொடுத்துள்ளார். அது நல்ல விடயம். அதில் தாம் தலையிடப் போவதில்லை.

இதேபோன்று கல்முனை வைத்தியசாலை மற்றும் தாதியர் தொடர்பான பிரச்சினைக்கும் ஜனாதிபதி தீர்வு வழங்க வேண்டும். இதற்குத் தேவையான சுற்றறிக்கை மாற்றங்களை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட குழுவுக்கு காலக்கெடு விதித்து உடனடியாகப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

ஞானசார தேரர் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அவரைச் சந்தித்துப் பேசிய விதம் தமக்குப் பிடிக்கவில்லை. இது தொடர்பில் அன்றிரவே தமது அதிருப்தியைத் தெரிவித்திருந்தேன்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதிலோ அல்லது முன்னர் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் காணப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்து மீண்டும் மன்னிப்பு வழங்குவதிலோ எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது ஜனாதிபதி, மகா சங்கத்தினர், மகாநாயக்க தேரர்கள் மற்றும் சிங்களப் பொதுமக்கள் தீர்மானிக்க வேண்டிய விடயமாகும். அதில் தாம் தலையிட வேண்டிய அவசியமில்லை. தலையிட்டால் எமக்குச் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதையும் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் தெரிவித்தேன்

லக்ஷ்மன் கிரியெல்ல பயன்படுத்திய 'சிறு ஜாதி', 'பெரிய ஜாதி', போன்ற சொற்பிரயோகங்கள் பிரச்சினைக்குரியவை. இத்தகைய சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அவற்றைக் கடந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம் என்றும் அவரிடம் தெரிவித்தேன்.

எங்களைத் திருப்திபடுத்துவதற்காகவே அரசாங்கம் பௌத்தர்களையும் தேரர்களையும் கைது செய்கின்றது எனக் கூறுவதும் தவறானது. அவ்வாறான கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்கக் கூடாது. அரசாங்கம் அவ்வாறு செய்கின்றதா என்பது தமக்குத் தெரியாது. அதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சிங்கள மக்கள் மத்தியில் தேரர்கள் கைது செய்யப்படுவதால், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அது பிடிக்கும் என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்ற எண்ணம் உருவாகக்கூடும். இது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன், சமூகங்களுக்கிடையிலான நெருக்கடியையும் அதிகரிக்கும். இதனையே லக்ஷ்மன் கிரியெல்லவிடம் தெரிவித்தேன்.

அரசாங்கம் தவறு செய்தால் அதனைத் தவறு என்றும், எதிர்க்கட்சி தவறு செய்தால் அதனையும் தவறு என்றும் சுட்டிக்காட்ட வேண்டும். சரியானதைச் சரி என்றும், தவறானதைத் தவறு என்றும் கூறுவதே நடுநிலையான அணுகுமுறையாகும். 'நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு. எமது மக்களையும் தமிழ் மக்களையும் தமிழ் பேசும் மக்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.