‘பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை’ மீளப் பெற வலியுறுத்தி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம்



‘பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்’ இன்று (6) முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு எதிராகவும், குறித்த சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வலியுறுத்தியும் இன்று பத்தரமுல்லை பொல்தூவ சந்தியில், பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் அடையாள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கமும் (SWJA), சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டமைப்பும் (CSMD) இணைந்து ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை சிவில் உரிமைகளை கடுமையாகப் பாதிக்கும் வகையில் இந்தச் சட்டமூலம் அமைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததுடன், அதனை உடனடியாக மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.