கலகொடஅத்தே ஞானசார தேரரை இனவாதி என முத்திரை குத்த வேண்டாம் - சட்டத்தரணி மனோஜ் கமகே


தற்போதைய அரசாங்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) கொள்கைகளைக் கொண்ட சில முக்கிய குழுக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும், அது தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தயாராக உள்ளதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (15) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி மனோஜ் கமகே:

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது ஓய்வு காலத்தில் மனைவியின் பராமரிப்பு மிகவும் அவசியமான ஒரு சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் திருமதி சிராந்தி ராஜபக்ஷவை சிறையிலடைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவந்து சேவை செய்த ஒரு தலைவருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

திருமதி சிறாந்தி ராஜபக்ஷ போலி நோயைக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் எனப் பொறுப்புள்ள ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் பெறப்பட்ட மருத்துவ அறிக்கைகளின்படி, அவருக்கு அவசரமாக இருதய அறுவை சிகிச்சை (Bypass Surgery) செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் உயிரோடு அரசாங்கம் விளையாடக் கூடாது. மருத்துவ அறிக்கைகளை சவாலுக்கு உட்படுத்துவது நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

அத்துடன், கலகொடஅத்தே ஞானசார தேரரை 'இனவாதி' என முத்திரை குத்த வேண்டாம்.

அவருக்கு இந்த தீவிரவாத ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கைகள் தொடர்பான தகவல்களை வழங்கியதே பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் தான். சிறையில் இருக்கும் ஞானசார தேரர், நாட்டின் எதிர்கால பாதுகாப்பு குறித்த கவலையையே வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கையுடைய குழுக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்போடு விளையாடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தூதுவனைக் கொல்வதற்குப் பதிலாக அவர் கொண்டு வரும் செய்தியைக் கவனியுங்கள். ஞானசார தேரருக்கு எதிராக விரல் நீட்டுவதற்கு முன், அவர் கூறுவதில் உள்ள உண்மையைக் கண்டறியுங்கள்.

எனவே, சட்டப்பூர்வமான வழிமுறைகளின் கீழ் ஜனாதிபதி அவர்கள் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்தார்.