போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு? – மஹிந்த கஹந்தகம தொடர்பில் விசாரணையில் பல தகவல்கள் அம்பலம்



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டுள்ளார் என்பதற்கான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அவர் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலொன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இன்று (06) காலை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார்.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவர் டுபாய் சென்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்றுடன் விருந்துபசாரத்தில் ஈடுபடும் காணொளிகள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன.

இந்தக் காணொளிகளில் மோதர நிபுன எனப்படும் குற்றவாளியின் சகோதரனான சதுர தில்ருக்ஷான் மற்றும் கெசல்வத்தை தினுஷ ஆகிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் காணப்படுவதுடன், அவர்களுடன் கஹந்தகம மிக நெருக்கமாகச் செயற்படும் விதம் பதிவாகியுள்ளது.

இதன்போது அவர்கள் கஹந்தகமவை 'டெடா' (Dada) என அழைப்பதும் இடம்பெறுகிறது.

அத்துடன் இப்பாகேவத்தை சுஜீ எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருடனும் அவர் நெருக்கமான தொடர்புகளைப் பேணியுள்ளதுடன், இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கஹந்தகம, இப்பாகேவத்தை சுஜீவிடம் பெற்றுக்கொண்ட ஐஸ் போதைப்பொருளுக்கான பணத்தைச் செலுத்தத் தவறியமையால், அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கஹந்தகம வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில், இந்தப் போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் 1100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நுகேகொடைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்று (06) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.