
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக, நடைமுறையில் செயற்படுத்த முடியாத தீர்வுகளை அரசாங்கம் முன்வைத்து வருவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதி செயலாளர் பேராசிரியர் அருண வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை ஒரே நாளில் ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது கடினமானதாகும்.
அதற்குப் பதிலாக, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களும் ஒரே நாளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஒரே நாளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தால், பல்கலைக்கழகக் கட்டமைப்பில் காணப்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். எனினும், தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறான முறையை நடைமுறைப்படுத்துவது மாணவர்களுக்கு பாரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
சர்வதேச ரீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் ஒரே நாளில் இணைத்துக்கொள்வதே வழக்கமாக உள்ளது. ஆனால், இலங்கையில் இதனை நடைமுறைப்படுத்த முடியாது. எமது நாட்டில் சில பல்கலைக்கழகங்களில் ஒரு கல்வியாண்டில் ஆறு மாணவர் குழுக்கள் கூட காணப்படுகின்றன. எனவே, அரசாங்கம் பல்கலைக்கழகங்களை ஒரே நாளில் ஆரம்பிக்க முயற்சித்தாலும், அது சாத்தியமற்றது.
முதலில் பல்கலைக்கழக மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும். வெவ்வேறு பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஒரே திகதியில் ஆரம்பிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைமுறையில் செயற்படுத்த முடியாத தீர்வுகளை முன்வைத்து நிலைமையைச் சமாளிப்பதற்குப் பதிலாக, தற்போதுள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பை மேலும் வினைத்திறனுடையதாக மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.











.jpg)
