இலங்கை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்த வேண்டுமாயின் இலஞ்ச ஊழல் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்கள் ஏனைய இனத்தவர்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் அனுபவிப்பவர்களாக மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் நிச்சயமாக இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) வியாழக்கிழமை நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஊழல் என்பது எந்தவொரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. ஊழல் என்பது மக்களின் பணத்தையும் மக்களின் வாய்ப்புகளையும் மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் தேசிய பிரச்சினையாகும். இங்கு ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான பட்டியலொன்று வாசிக்கப்பட்டது.
நாட்டை ஆண்டவர்களே இந்த பட்டியலில் பெரும்பாலும் இருக்கின்றனர். சுதந்திரத்திற்கு பின்னர் இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் ஊழல் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறும் போது பொதுமக்களின் பணத்தை ஆட்சியாளர்கள் எவ்வாறு மோசமாக துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதனை அறியக்கூடியதாக உள்ளது.
இப்போது சகல வசதிகளுடனும் இருக்கும் சிங்கப்பூர் ஒருகாலத்தில் இலங்கையை போன்று மாற வேண்டும் என்று அந்த நாட்டின் தலைவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு சகல வளங்களையும் கொண்டிருந்த இந்த நாடு இரண்டு காரணங்களால் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்க்கொள்ளும் நாடாக மாறியது. இந்த நாட்டை ஆட்சி செய்தவர்களும், மோசமான நடத்தையை கொண்ட அரச உத்தியோகத்தர்களும் நாட்டை சூறையாடி மக்களை ஏழையாக மாற்றினர்.
நாட்டின் சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களை போன்று கருதாமல் அடக்கி ஒடுக்கியதால் ஏற்பட்ட யுத்தமும் ஒரு காரணமாக இருந்தது. இந்த நாட்டை வளர்ச்சியடைந்த நாடாகவும், இங்கு வாழும் மக்கள் தமது சுதந்திரத்தை அனுபவிக்கும் நாடாகவும் வர வேண்டும் என்றால் இந்த இரண்டு விடயங்களும் தீர்க்கப்பட வேண்டும்.
ஊழல் முழுமையாக துடைக்கப்பட்டு, சிறுபான்மை மக்கள் ஏனையவர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பவர்களாக மாற்றப்பட வேண்டும். இதற்கான வழியேற்படுத்தப்படாவிட்டால் நிச்சயமாக இந்த நாடு முன்னேற்றமடையாது என்றார்.










.jpg)

