நாட்டின் பல பகுதிகளுக்குக் கடும் மின்னல் எச்சரிக்கை – நாளை அதிகாலை வரை அமுல் !



நாட்டில் பல மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ‘அம்பர்’ நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, நாளை புதன்கிழமை (21) அதிகாலை 1.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, வடக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களை குறைத்துக் கொள்ள பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாதுகாப்பான இடங்களில் தங்குதல், திறந்தவெளிகள், வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்கவும்.

மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும்.

உயரமான மரங்கள் அல்லது மின் கம்பங்களுக்கு அருகில் தஞ்சமடைவதைத் தவிர்க்கவும்.

இடி மின்னல் நிலவும் போது லேண்ட்லைன் தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்தவெளி வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.