
ஒரு வருடத்தில் இரண்டு தடவைகளே நீர் கட்டணம் தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பிரகாரம் இந்த வருடத்தில் நீர் கட்டண அதிகரிப்பு எதுவும் இடம்பெறாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
கண்டி குண்டசாலைப் பகுதியின் நீர் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வினை வழங்கும் நோக்கில் பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டத்திற்கு நேற்று (14) அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஒரு வருடத்தில் இரண்டு தடவைகளே நீர் கட்டண திருத்தம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் பிரகாரம் இந்த வருடம் நீர் கட்டண அதிகரிப்பு எதுவும் இடம்பெறாது. இது தொடர்பான மீளாய்வு அல்லது திருத்தம் மீண்டும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குப் பின்னரே இடம்பெறும்.
நீர் தொடர்பான தொழில்துறையின் சில உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளபோதிலும், நீர் கட்டணத்தை உயர்த்துவதா அல்லது குறைப்பதா என்பது குறித்து எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும்.
இந்நீர் வழங்கல் திட்டம் 2 பில்லியன் ரூபா செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் குண்டசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்குத் தடையின்றித் தொடர்ச்சியாக நீரை வழங்க முடியுமாகும்.
அடுத்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் 2000 பில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் ஒரு பாரிய நிதி ஆண்டாக இது அமையும். இதன் மூலம் நாட்டில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். இதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் ஆண்டாக அது அமையும் என்றார்.








.jpeg)
.jpg)


