ஞானசார தேரரின் விடுதலை கோரி ஐந்தாவது நாளாகத் தொடரும் நடைபவனி – நாளை கொழும்பை சென்றடைகிறது !



கலாகொட அத்தே ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘காவி உடைக்கு நீதி – சுதந்திரத்துக்கான நடைபவனி’ இன்று (14) புதன்கிழமை ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், நிட்டம்புவை நகரிலிருந்து ஆரம்பமாகும் நடைபவனி கடவத்தை நகரைச் சென்றடையவுள்ளதாக உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து இந்த நடைபவனி ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய தினம் நடைபவனி கடுகன்னாவை வரை முன்னெடுக்கப்பட்டு முதலாவது நாள் பயணம் நிறைவுசெய்யப்பட்டது.

இரண்டாவது நாளில் கடுகன்னாவையிலிருந்து ஆரம்பமான நடைபவனியில் தேரர்கள் கேகாலை நகரை வந்தடைந்தனர்.

மூன்றாவது நாளில் கேகாலையிலிருந்து புறப்பட்ட நடைபவனியில் வரக்காபொல நகரை வந்தடைந்தனர்.

இந்நிலையில், இன்றையதினம் ஐந்தாவது நாள் பயணமாக நிட்டம்புவையிலிருந்து ஆரம்பமாகும் நடைபவனி கடவத்தை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

தொடர்ந்து, நாளை (15) வியாழக்கிழமை இந்த நடைபவனி கொழும்பைச் சென்றடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.