ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி போராட்டம் : பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி




கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொட கஸ்ஸப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் பலாங்கொட கஸ்ஸப தேரரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்னதாக, கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்கள் அதிக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.