‘கிளீன் கொழும்பு’ திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்!



கிளீன் சிறிலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் கொழும்பு’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (09) வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கொழும்பு நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மலசலகூடக் கட்டமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களைப் புனரமைத்தல், சுற்றுச்சூழலை அழகுபடுத்துதல் மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியன மேற்படி திட்டத்துடன் தொடர்புடைய பிரதான நிறுவனங்களாகும்.

இந் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் சமூக நல்வாழ்வு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஒழுக்கவிழுமிய மறுமலர்ச்சிக்காக பிரஜைகளின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளை, கொழும்புக்குரிய திட்டங்களுடன் ‘Clean Colombo’ திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், ஜனாதிபதி மேலதிக செயலாளர் (Clean Sri Lanka) எஸ்.பி.சி. சுஜீஸ்வர உள்ளிட்ட 'Clean Sri Lanka' செயலகத்தின் பிரதிநிதிகள், கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் உள்ளிட்ட கொழும்பு மாநகர சபையின் பிரதிநிதிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகள், இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதிநிதிகள், இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.