பச்சை குத்தினாலும், நீண்ட தலைமுடி வைத்திருந்தாலும் கைது இல்லை – நீதி அமைச்சர் விளக்கம்


இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் கீழ், உடலில் பச்சை குத்தியிருப்பவர்கள், நீண்ட தலைமுடி வைத்திருப்பவர்கள் அல்லது குறிப்பிட்ட ஆடைகளை அணிபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற தகவல்களை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மறுத்துள்ளார்.

இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

“விரும்பிய ஆடைகளை அணிவதும், பச்சை குத்திக்கொள்வதும், விருப்பமான தலைமுடி அலங்காரத்தை வைத்திருப்பதும் அடிப்படை உரிமைகளாகும்” என அவர் வலியுறுத்தினார்.

முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் 4(2)ஆம் பிரிவில், ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான 12 காரணிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.

அவற்றில் குற்றக் குழு உறுப்பினர்களுடன் தொடர்புடைய ஆடை அலங்காரம், கைச்சைகைகள், மொழிப் பயன்பாடு மற்றும் பச்சை குத்துதல் போன்றவையும் உள்ளடங்குகின்றன.

எனினும், இவை தனித்தனியாகக் குற்றங்களாகக் கருதப்படமாட்டாது என்றும், குற்றக் குழுவொன்றுடன் தொடர்புடையவரா என்பதை மதிப்பிடுவதற்கான காரணிகளாக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல், கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டமூலம் தற்போது நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பு கட்டத்தில் உள்ளதாகவும், அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படுவதாகக் கருதுபவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பொலிஸாரிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் பிணை வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பில் சட்ட நிபுணர்கள் தனியான கவலைகளை வெளியிட்டுள்ளனர்.