ஞானசார தேரரை விடுவிக்கும் வரை வெளியேற மாட்டோம் – ஜனாதிபதி செயலகம் முன் பிக்குகள் போராட்டம்!





சிறையில் உள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் பௌத்த பிக்குகள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்கிறது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குக் குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஞானசார தேரரை விடுவிப்பது குறித்த சாதகமான அறிவிப்பு வெளியாகும் வரை ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேறப்போவதில்லை எனப் பிக்குகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

கடும் மழையையும் பொருட்படுத்தாமல் கொழும்புக்கு வருகை தந்த பிக்குகள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பேச்சுவார்த்தையின் முடிவு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை..